சிகப்புமழை

>> Saturday 17 January 2015



           சிறுகதை                     

அந்த விநோதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பதறியடித்து ஓடினார்கள். ஜன்னலில் நின்று ‘ஆ’ என்று பார்த்தார்கள்.மழை பெய்தது வழமை போல் அல்ல சிவப்பாக.....! காலையில் ஆறு முப்பதற்கு பெய்த மழை இன்னும் முடியவில்லை. கரும் சிவப்பாக ரத்தம் நிறத்தில் வடிந்தது. ஏறக்குறைய நாட்டின் முழுபாகத்திலும் ஒரே நேரத்தில் அடித்து ஊத்தியது. வீதி நடுவில் மாட்டிக்கொண்டவர்கள் கடைகளில் ஒதுங்கி நடுங்கினர். புகைத்த சிகரட்டுகள் பாதியில் நின்றன. மழையில் நனைந்தவர்கள் மழை நீரை துடைக்க சிகப்பு நிறத்தில் மா மாதிரி விநோதமாக பிசுபிசுத்தது. நாடே ஸ்தம்பித்தது. யாரும் வேலைக்கு போகவில்லை. “டுடே ஐ பீல் வெரி டிபரென்ட் எக்ஸ்சைடிங் பீலிங். அண்பிலீபபிள் ஐ சோ ரெட் ரெயின்..” என்று பேஸ்புக்கில் அவசர இளைஞர்கள் ஸ்டேட்ஸ் போட்டார்கள். பாடசாலை சிறுமிகள் போக மாட்டோம் என்று அம்மா பின்னால் ஒளிந்துகொண்டனர்.


“அவரசர செய்தி நாட்டில் பல பாகங்களில் வழமைக்கு மாறாக சிவப்பு நிறத்தில் மழை பெய்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. அரசங்கம் மக்களை அச்சப்பட வேண்டாம்......” என்று டிவி, ‍‍ரேடியோவில் அந்த வினோத செய்தி பறந்தது.


சரியாக இரண்டு முப்பதுக்கு முதல் மழை நின்றது. ரத்த வெள்ளம் கால்வாய்களில் தேங்கியிருந்தது. மக்கள் கூடி கூடி கதைத்தார்கள் .வீதிகளில் இறங்க பயப்பட்டார்கள். சிலர் போட்டில்,பத்திரங்களில் சேகரித்து கொண்டார்கள். கிராமமக்கள் நிஜமாக ரத்தம் என்று எண்ணி சிலிர்த்தார்கள். சில பாதிரியார்கள் சர்ச்சில் “ இயேசு இதோ வரப்போகுறார்..... உங்கள் பாவங்களே இப்போது அவர் புனித இரத்தத்தினால் கழுவப்பட்டது.....” என்றார்கள்.


அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் தொடர்ந்தன.“சிகப்புமழைக்கு காரணம் சொல்ல வேண்டிய தார்மிக பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு..மழுப்புவது ஜனாதிபதிக்கு அழகு அல்ல..இந்த அரசு சதிசெய்கிறது” எதிர்கட்சிகள் சீறின.

மழையின் மாதிரிகள் பெறப்பட்டு ஆராய்ச்சிகள் தொடந்தன.... எதையும் சரியாக கூற முடியவில்லை. நிச்சயமாக இது ரத்தமில்லை... பயப்பட வேண்டாம் அரசாங்கம் அலறியது. மழை நிறமாற்றத்துக்கான காரணம் அறிய எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது....எந்த முன்னேற்றமும் இல்லை.

வாயு மண்டலத்தில் தூசு துணிக்கைகள் செறிவாகக் காணப்பட்டாலோ அல்லது பாலை வனங்களில் ஏற்படும் புயல் காற்று போன்றவற்றினால் இவ்வாறு மழையின் நிறம் மாறலாம் என கட்டுரைகள் சண்டேடைம்ஸ், வீரகேசரி ,தினக்குரலில் அரக்கபரக்க எழுதப்பட்டது.

ஜனங்கள் சமாதானமாகவில்லை. நான்காம் நாள் கழித்து அடித்ததுமழை.... முழுசிகப்பு ரத்த சிகப்பு... பயத்தின் விளிம்புக்கு சென்றார்கள் மக்கள். பிரச்சனைகள் அதிகமாகின, ஏதோ கெட்டது நடக்க போகுறது என்று மக்கள் அடித்துபிடித்து அத்தியாவசிய பொருட்களை வேண்ட கடைகாரர்கள் பதுக்கினார்கள். காகில்ஸ், ஆர்.பி.கோ, கேலிஸ் வெறுமையாக மூடப்பட்டது பாங்கில் இருந்த பணம் ஒரேநாளில் அனைவராலும் எடுக்கப்பட பங்கு சந்தை நிலவரம் அபாயகரமாக ஆடியது.

நிலைமை விபரீதமாக ஜனாதிபதி ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அலரிமாளிகை சுறுசுறுப்பானது. வியர்க்க சூடாக வந்து அமர்ந்தார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சந்திரசேகர. அரச,தனியார் யுனிவேர்சிட்டி புரோபசர்கள் பதைபதைப்போடு அமர்ந்து இருந்தார்கள். ஏ.ஸி.. மெலிதாக ஜில்லிட்டது. ஜனாதிபதி மெல்லிய புன்னகையுடன் வந்தார். மரியாதை நிமிர்த்தம் எழுந்து நிற்க..

“இதற்கு எல்லாம் இப்போது நேரம் இல்லை...மிக விநோதமான புதிய தலையிடி நமக்கு வந்துள்ளது. இந்த சிவப்பு மழை..” என்று அமைச்சரை பார்க்க.

“பரிசோதனைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது... பெறப்பட்ட மாதிரிகளை..முறையாக ஆய்வு செய்து கொண்டுள்ளோம்...ஆனால் விஞ்ஞானிகளால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. மிகவும் குழப்பமாக இருப்பதாக சொல்லுகிறார்கள்.” தயக்க பார்வையோடு விஞ்ஞான அமைச்சர் சொன்னார்.

“என்ன குழப்பம்...? இந்த 2049ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி திட்டத்துக்கு எத்தனை பில்லியன் ஒதுக்கியுள்ளேன்? ஆய்வுகூடத்தில் எத்தனை நவீனரக உபகரணங்கள் பொருத்த நிதியை அள்ளி அள்ளி கொடுத்து உள்ளேன்?? விஞ்ஞான வளர்ச்சியில் சீனா,இந்தியாவை நாம் முந்தவேண்டும் ஆசியாவிலே நாம் தான் முதன்மையான தொழில்நுட்ப நாடாக வர வேண்டும் என்று எனது அரசு எவ்வளவு முனைப்போடு  என் தலைமையின் கீழ் செயல்படுகிறது..... நீங்கள் உதாசீனமாக இருக்கின்றீர்கள்....”

எல்லோரும் மௌனமாக இருக்க அமைதி ஸ்தரமானது....

புரோபசர் நிமலசுந்தர் எழுந்து “ஜனாதிபதி அவர்களே... என்னிடம் இந்த பரிசோதனையை ஒப்படையுங்கள் என்னால் இதற்கு தீர்வை வழங்க முடியும்...எமது யுனிவேர்சிட்டியில் மிகச்சிறந்த ஆய்வுகூட வசதி உண்டு,எனக்கு போதிய அறிவு உண்டு என்று எண்ணுகின்றேன்.....சில நாட்களுக்கு முன்பு அம்பாறை வயல்வெளிகளில் வினோத வெளிச்சங்கள் வானில் தெரிந்தன விண்கற்கள் விழுந்தன.. அவற்றுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம்... உலக நாடுகள் அனைத்தும் இதை பற்றி பேசின..”

“அப்படி என்றால் நீங்களே தொடருங்கள்..” ஜனாதிபதி சொல்லி முடிக்கமுன் அமைச்சர் “மன்னிக்க வேண்டும் நிமலசுந்தர் தனியார் பல்கலைகழக புரோபசர்...இது தேசிய பிரச்சனை. அவர்கள் பல்கலைகழகத்தில் இதன் ஆய்வைதொடர அனுமதிக்க முடியாது.”

“அதனால் என்ன..... நிமலசுந்தர்..நீங்கள் எமது தேசிய ஆய்வறை மையத்தில் உங்களது ஆய்வைதொடருங்கள்...உங்களையே நியமிக்கின்றேன்”

காரில் ஏறும்போது நிமலசுந்தரை வேணுகோபால் கேட்டார் “என்ன நிமல் எதுக்கு நீயா போய் மாட்டிகிட்ட? உன்னால முடியும் எங்குற? ....”

வேணுகோபால் நிமலின் அதே பிரைவேட் யுனிவேர்சிட்டி சீனியர் புரோபசர். நிமல் கொஞ்சம் வேகமானவன் முப்பத்திரெண்டை இளமை என்று ஒத்து கொண்டால் இளைஞன்.மைக்றோ பயலோஜில் டொக்டர் பட்டம் பெற்றவன்.பிரைவேட் யுனிவேர்சிட்டியை நாட்டில் கொண்டுவந்து ஏறக்குறைய முப்பது வருடங்கள் முடிவடைந்துவிட்டன. எதையும் தீர்க்கமாக சாதிக்க முடியவில்லை.

“ஹ... ஏன் முடியா?.. நான் எங்க யுனிவேர்சிட்டி மூலமாக செய்யலாம் என்று நினைச்சு கேட்டன்... எங்க யுனிக்கு அட் கிடச்சமாதிரியும் இருக்கும். ஒரு எக்ல ரெண்டு ஒம்லேட் என்று நினைச்சேன். பாழா போன சந்திரசேகர..குறுக்க போய் கெடுத்திட்டார்....சொதப்பிட்டு”

“இப்ப என்ன பண்ண போற?”

“தேசிய ஆய்வறை மையத்தில் செய்யவேண்டியதுதான்....”

“நிமல்... நீ எங்க யுனிவேர்சிட்டியில் லீவு போட்டுட்டுதான் தேசிய ஆய்வறை மையத்தில் மினக்கிடலாம்....லீவு இப்ப தருவாங்களோ தெறியா... ஒரு மாத சம்பளம் போக போது.”

“அதனால என்ன புரோபசர்.. நிச்சயம்.... இது ஒரு சுவாரசியமான பரீட்சை.”

“ஹ்ம்ம்..... முடிந்தவரை.... நானும் ஹெல்ப் பண்ணுறன்... ஏதும் டௌட் என்றால்..கோல் மீ..”

“தேங்யு சேர்...”

அவன் காரில் போனதை சற்று கவலையோட பார்த்தார் வேணுகோபால். இவன் கெட்டிக்காரன்தான். ஒக்ஸ்போர்ட்டிலே கோல்ட் மெடல் வேண்டினவன் phdல். கண்டு பிடிப்பானா? கண்டுபிடித்து விடுவான்  வேணுகோபால் தீர்க்கமாக புன்னகைத்தார்.

தேசிய ஆய்வறை மையத்தில் நவீனகருவிகளுடன், மிக நுட்பமான மைக்ரோஸ்கோப் உதவியுடன் தனது ஓவ்வரு நானோ செகண்ட்டையும் மிக கச்சிதமாக பயன்படுத்தினான். சிகப்பு மழை நீரின் மாதிரிகள் புதிதாக பெறப்பட்டு பல கசப்பூட்டும்,எரிச்சல்படுத்தும் வேதனைகள் மெலிதாக இலையோடும் பல வர்ண பரிசோனைகளை நிதானமாக செய்தான்.

கடைசியில் அதிசயக்கதக்க ஒன்றை கண்டுபிடித்தான். மழை நீரில் சில உயிர் அணுக்கள் இருந்தன. மிக சிவப்பாக அவை இருந்தன. அதான் இந்த அபத்தமான நிறமாற்றத்துக்கு காரணம். எப்படி உயிர் அணுக்கள் மழை நீரில்? தாழமுக்கமான பகுதியில் சில சமயம் கடலில் இருந்து முகில்கள் மூலம் நீர் உறிஞ்சப்படும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீரில் சிறிய மீன்களும் இழுத்துச் செல்லப்படலாம். சிலசமயம் மழை பெய்யும் போது அந்த மீன்கள் நிலப்பரப்பை வந்தடைகின்றன. மீன்களில் இருந்து இந்த உயிர் அணுக்கள் சிதறியிருக்கலாமா? அவை பல நாட்கள் முகில்மூட்டங்களில் தங்கியிருக்கலாமா? அதற்கு சாத்தியம் குறைவு. அப்படி நடக்கவே முடியாது.

அந்த சிவப்பு அணுக்கள் இனப்பெருக்கம் செய்வதை தெளிவாக மைக்ரோஸ்கோப் மூலம் படம் பிடித்தான். பட பட என்று பிளந்து புதுப்புது உயிர் அணுகள் சீராக தோன்றின. ஒரே ஒரு விடயத்தை இல்லை அதிர்ச்சியை ஜீரணிக்கவே முடியவில்லை.... அவற்றின் DNA யை கண்டுபிடிக்க முயலும் போது அந்த அதிர்ச்சி அபாண்டமாக நிகழ்ந்தது. அவற்றுக்கு பொஸ்பரஸ் என்பதே இல்லை! பொஸ்பரஸ் இருந்தால்தான் DNA என்பதே இருக்கும். அல்காக்கள் ,சில பாசி வகைகளுடன் அதன் கலங்களை ஒப்பிட்டு பார்த்தான். மஹும்.. எந்த ஒற்றுமையும் இல்லை.

பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இந்த பொஸ்பரஸ் நிச்சயம் இருக்கும். DNA இருக்கும். அதில் மரபணுக்கள் இருக்கும். இவற்றுக்கு எதுவுமே இல்லை. அப்படி என்றால் இவை நமது கிரகத்தை சேர்ந்தவை இல்லையா? மை கோட்!!! எப்படி இது சத்தியம்? சற்று நடுங்கியது. சிகப்பு உயிர் அணுக்களை வெப்பபடுத்தி மெல்ல மெல்ல அவைகளின் மாற்றங்கள் அவதானித்தான். அவைகள் மாறவில்லை. நூறு பாகை செல்சியசிலும் வெப்பநிலையிலும் அவை சந்தோஷசமாக இனம்பெருக்கின... நிமலுக்கு மூக்கு வியர்த்தது. எந்த புவி உயிரினங்களும் இந்த வெப்பத்தில் உயிர் வாழ முடியாது...இவை இனமே பெருக்குகின்றன!!

வேற்றுகிரக உயிர்கள் பூமிக்கு ஊடுருவ தொடங்கிவிட்டது...நிச்சயம் இவை அவைதானா???....அதற்கு சாத்தியமேயில்லை. இதுவரையில் இப்பிடி அதிர்ச்சியான பதிவுகள் பதிவானது இல்லை.

வேணுகோபாலுக்கு சற்று அவஸ்தைகளோடு போன் செய்தான்.

“சொல்லுடா.... நிமல்...என்ன ராத்திரி இந்த நேரத்தில போன்?” வேணுகோபால் கொட்டாவியை அடக்கிகொண்டார்.

“சேர்..விஷயம்.. ரொம்ப தீவிரம்....”

“என்ன ஆச்சு?”

முழுவிபரமும் சொன்னான்.

“இட்ஸ் மிராக்கில்....நிமல்...அமெரிக்கா காரன் கூட வேற்றுகிரகத்தில் உயிர்கள் இருப்பதை இதுவரையில் ஆதார பூர்வமாக சொன்னது இல்லை....”

“புரோபசர் சேர்... இப்ப பிரச்சனை..இந்த அணுக்கள் எப்படி முகில் மூட்டங்களுடன் கலந்தன? எப்படி நமது கிரகத்துக்கு வந்தன என்பதுதான்...”

“நிச்சயம் விண்கற்கள் மூலம் தான், விண்கற்கள் இங்க விழுந்தது தானே.... அதன் மூலம்தான் இது பரவியிருக்கனும்.. சிம்பிள்... அவை அசுர வேகத்தில் வரும்போது வாயுமூலகூறுகளுடன் உரசும்... அப்போது இவை பரவியிருக்கனும்.....முகில்முட்டங்களில் தங்கியிருக்கனும்..அப்புறம் மழையோட இவை கலந்து இருக்கணும்...”

“ம்ம்............... இததான் நானும் நினைச்சன்... இப்போ விழுந்த விண்கற்களில் இப்ப கண்டுபிடிச்ச உயிர் அணுக்கள் இருந்தா ப்ரோப்ளம் தீர்ந்தது...”

“நிச்சயமா இருக்கும்.... நீ இப்ப அந்த விண்கற்களை பரிசோதித்து பார்.....”

“புரோபசர் விண்கற்கள் மாதிரியை எங்க எடுக்கலாம்.....?”

“ஏன் தேசிய ஆராய்ச்சி மையத்தில் இல்லையா...?”

“இங்க ஒன்றும் இல்லை... புரோபசர்....”

“அட.... என்னையா நடத்துறாங்க கொஞ்சம்கூட...பொறுப்பே இல்லாமா கொவர்மென்ட் இருக்கு”

“ம்ம்............” வேணுகோபால் கொவர்மென்ட்க்கு ரொம்ப வேண்டப்பட்டவர் என்பது நிமலுக்கு தெரியும். வேணுகோபால் கொவர்மென்ட்டை விமர்சிக்கும்போது ஒதுங்கி இருப்பது உசிதம்.

“சரி..நாளை அம்பாறை போவம்.... அங்க விவசாயிகள்..அந்த துண்டுகள் நிறைய வச்சு இருக்குறார்கள்... வீ வில் கோ”

“நாளை வரை பொறுக்க வேணுமா???”

“இப்ப மணி பதின்னொன்றரை தாண்டிட்டு நீ போய் நித்திரைகொள்.....”

“....ஹம்ம்........”

“அமெரிக்கா காரன் கண்டுபிடிக்காததேயே..நீ கண்டுபடிச்சிடுட்டடா....ஓகே பாய் குட் நைட்...”

நிமலசுந்தரினால் தூங்க முடியவில்லை..பிரமிப்பாக இருந்தது. தவறுக்கு இடம் இருக்குமா? ச்சே ச்சே நிச்சயமா இல்லை...அப்ப நிஜமா??? இந்த உயிர் அணுக்களினால் பூமிக்கு பாதிப்புகள் வரலாமா??? போயும் போயும் நம்ம நாட்டிலையா இப்படி?

வெள்ளை சேலையில் வள வளப்பான சிவந்த பெண்கள் தேசிய கீதம் பாடி முடிக்க...நீல சேலையில் புன்னகை வழிய அவள் மென்மையாக நடந்து வந்து தட்டை நீட்ட ஜனாதிபதி தட்டில் இருந்து பதக்கத்தை மாட்ட கீர்ர்ர்ர்..... என்று அலாரம் அலற...சட்டென்று சர்வ புலன்களும் வெடித்து எழுப்ப கனவு கலைந்தது...



வேணுகோபாலும், நிமலும் அம்பாறை போய் சேர பசித்தது. சில விவசாயிகள் கண்ட காட்சிகளை விபரித்தனர்...

“ஒரு ராவு பத்தரை இறுக்கும்க...ரொம்ப இரச்சலாக சத்தம் கேட்டுச்சு...முதல் என்னன்டு புரியல... நாய்ங்க எல்லாம் ரொம்ப கொலைச்சதுங்க....அப்பதான் என்னடா என்று பார்க்க...வானத்துல இருந்து.. ரொம்ப வெளிச்சமா பந்துகள் மாதிரி வந்து விழுந்துச்சுங்க...விழுந்த இடத்தில பயிர்கள் எல்லாம் கருகிடுச்சுங்க...” அந்த எழுவது வயசு மதிக்க தக்க அவர் கையை காட்டி காட்டி கதைத்தார்.

சில மாதிரிகளை பெற்றுக் கொண்டு “வாறம் பெரியவரே” என்று புறப்பட்டார்கள்.....


“புரோப்.... என்னால நம்ப.. முடியல இதுல அந்த சிவப்பு அணுக்கள் இருந்தால்....ஸ்டிபன் கொஹ் சொன்னது எல்லாம் உண்மை ஆயிடும்... அமேசிங்..”

“முதல் முதலாக வேற்றுகிரகத்தில் உயிர்கள் இருப்பதை ஸ்ரீலங்காதான் தான் ஆதரபூர்வமாக கண்டுபிடிச்சது..அப்படின்ற செய்திய கேக்க போகுறோம்.. இன்பமாக இருக்குறது... எல்லா பெருமையும்.. உனக்குதான் சேரும்...”


தேசிய ஆய்வறை மையத்தில் நிமல் வந்து சேர படபடப்பு எஞ்சி இருந்தது.... சின்ன சின்ன துண்டுகள் ஆக்கி... அதனை மைக்ரோஸ்கோப்பினுள் செலுத்தி..நுணுக்கமாக ஆராய்ந்தான்....

டிக் டிக் நிமிடங்கள் சுவாரசியம் ஆனன..

அதே சிவப்பு உயிர் அணுக்கள் அந்த விண்கற்கள் மாதிரியிலும் இருந்தன........


நிமலசுந்தர் பரிசோதனை முடிவுகளையும் அதன் விளக்கங்களையும் எளியவடிவில் எழுதி இறுதி அறிக்கை தயார் செய்து.... விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கு கையளித்தான்.


அடுத்தநாள் நாடு முழுவதும் பறபறத்தது... அனைத்து பத்திரிகை,டிவி,ரேடியோவில் புகழ்மழை. வேற்று உலகத்தில் உயிர்கள் இருப்பது நிருபிக்க பட்டது... ஸ்ரீலங்கா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. அமெரிக்க நாஸா அதிர்ந்தது..அவசரம் அவசரமாக விளக்கம் கேட்டது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் தேசிய ஆய்வறை மையத்தின் அறிக்கைகள் ஆதாரத்தோடு சமர்ப்பிக்க பட்டன. ஆராய்தவர்கள் திணறினார்கள்.


உலகம் முழுவதும் பறபறத்தது...பி.பி.ஸி யில் ஒரு நாள் முழுவதும் கதைத்தார்கள். டைம்ஸ், நீயுஸ்வீக்  வெளிநாட்டு பத்திரிகைகள் நிமலின் போட்டோவை அட்டை படமாக போட்டு அவன் பூர்வீகத்தை அலசி ஆராய்ந்து இருந்தன. நிமல் பூரிப்பில் நிலவின் மேல் ஒக்சிஜென் இன்றி நடந்தான்.


ஜனாதிபதிக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தன. உலக வங்கி பல பில்லியன் நிதியுதவி விஞ்ஞான வளர்ச்சிக்கு கடனாக வழங்கியது. இந்திய லேட்டாக சற்று பொறாமையாக பாராட்டியது.

ஹவர்ட், ஒக்ஸ்போர்ட் யுனிவேர்சிட்டிஸ்.... சிறப்புரை ஆற்ற நிமலை அழைத்தன......


அலரிமாளிகையில் மிகப்பெரிய விருந்து ஏற்பாடாகியது. ஜனாதிபதி, அமைச்சர்கள் மனைவிகள் சகிதம் கலந்து கொண்டனர்...நிமலுக்கு காண்பவர்கள் எல்லாரும் கட்டிபிடித்து வாழ்த்துக்கள் சொன்னார்கள். வேணுகோபாலும் உற்சாகமாக இருந்தார்.

“வாவ்...கலக்கிட்டடா.... என் ஜூனியர் என்று சொல்ல பெருமையாக இருக்குறது... யு டிட் கிரேட் ஜோப் நிமல்”

“எல்லாம்... உங்க ஆலோசனை..ஆசிர்வாதம்தான்... புரோப்”

“உனக்கு நோர்பல் பரிசும் கிடைக்கலாம்.....”

“விளையாடதிங்க புரோப்.... நான் அப்படி என்ன பெருசா சாதிச்சுடன்....ஜஸ்ட் உயிர் அணுக்களை எங்க இருந்தது என்று கண்டு பிடிச்சன்....அவ்வளவுதான்.”


“உன்னால ஸ்ரீலங்காக்கு எவ்வளவு பெருமை...”

ஜனாதிபதி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சந்திரசேகர, புரொபசர் வேணுகோபால் மேல்மாடியில் மிக தனியாக சந்தித்தனர். சற்று அட்ககோல் வாசனை வீசியது அவர்களிடம்

“வட் எ பிறில்லியன்ட் ஐடியா.... எல்லாரும் நம்பிட்டாங்க....” என்றார் சந்திரசேகர.

“எல்லாம்... வேணுகோபாலின் திறமைதான்....” ஜனாதிபதி சிரித்தார்.

“நான் என்ன அப்படி செய்துட்டன் சேர்....செயற்கையாக அந்த சிவப்பு உயிர் அணுக்கள் ரகசியமாக தயார் செய்தேன் அவ்வளவுதானே...”

“அதை ரகசியமாக முகில் கூட்டத்தில் அனுப்பி பரவவைத்தது...செயற்கையாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அந்த சிவப்புமழையை வரவைத்து...எவ்வளவு பெரிய....ட்ரிக்..” என்றார் சந்திரசேகர


“ஆனா எப்படி விண்கற்கள் விடயத்தை கையாண்டீர்கள்.... அதை எப்படி நம்ப வைத்தீர்கள்..?”

“அது...சிம்பிள்..நிஜமா வானத்தில ஒன்றும் வெளிச்சம் விநோதமாக வரவில்லை...நாம் தான் விமானபடை மூலம் ஒளி கற்களை தெறிக்க செய்தோம்..ஜனங்க நம்பிட்டாங்க... பறக்கும் தட்டு என்றான்க.. பி.பி.ஸி கூட நம்பிட்டாங்க... இஸ்ரோ கூட ஆடிட்டு...உலகமே நம்பிச்சு அது வேற்று உலக நடமாட்டம் என்று....”

“அது எப்படி விண்கற்களை விழ செய்தீர்கள்??? அங்க இருக்குறவங்க..நிஜமாகவே வானத்துல இருந்து வந்தது விழுந்தது.....என்றாங்க..”


“ஹஹா..........அது நீங்கள் கொடுத்த சிவப்பணுக்கள் பூசப்பட்ட கற்கள் ஜெட் விமானத்துல இருந்து... எறியும் படியாக..வீசப்பட்டது...சந்தேகமே வரல..எல்லாம் கச்சிதமாக நடத்தப்பட்டது....”

“ஹஹ.. மை ஜீனியர் நிமலசுந்தர்..நாம எதிர் பார்த்த படி அதேயே சொன்னான் நான் ஆரம்பத்தில பயந்தன் பட் எல்லாம் சூமூத்..நம்ம மூன்று பேருக்கு மட்டும்தான் விஷயம் தெரியும்”

“உண்மையா வேற்று கிரகத்துல உயிர் இருக்கா?”

“இருக்கோ இல்லையோ... நம்ப வச்சாச்சு...”

“கண்டு பிடிசுடுவாங்களா??” என்றார் சந்திரசேகர சற்று தளர்ந்த குரலில்.

“அமெரிக்காவுக்கு மட்டுமா....ஷெட் போட்டு... நிலவுல மனுசன் போன மாதிரி டிமிக்கி பண்ண முடியும்.”


“ஹஹஹாஹ......” அந்த சிரிப்பு நீண்டது

நிமல் விருந்தில் மையமாக அனைவரையும் பார்த்து சிரித்துகொண்டு நோபல் பரிசு நமக்கு கிடைக்குமா... புரோப் சொன்னமாதிரி...... என்று விநோதமாக பூரித்தான்.



Comments

2 கருத்துக்கள்:

மெக்னேஷ் திருமுருகன் 26 February 2015 at 17:31  

என்னுடைய ப்ளாக்லயும் முதல் சிறுகதை சயின்ஸ் பிக்சன் தான் ப்ரோ . நேரமிருந்தா படிச்சுப்பாருங்க

http://vimarsanaulagam.blogspot.com/2014/06/blog-post.html

Annogen 26 February 2015 at 19:49  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. கண்டிப்பா படிக்கின்றேன் ப்ரோ ..

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP